அபிவிருத்தி லொத்தர் சபையின் வரலாறு

அபிவிருத்தி லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் நிலையம் என்ற பெயரில் 1983 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிலையத்தின் பிரதான குறிக்கோள் அரசாங்கத்தின் நிதிச் சேகரிப்புக்கு உதவுவதாகும்.

தொடர்ந்து 1993 இல் அபிவிருத்தி லொத்தர் நிலையம் “அபிவிருத்தி லொத்தர் நம்பிக்கை நிதியம்” என்ற பெயரில் நம்பிக்கை நிதியமாக்கப்பட்டது. 1997 ஓகஸ்ட் 12 ஆம் திகதி இந் நம்பிக்கை நிதியம் அபிவிருத்தி லொத்தர் சபையின் 1997 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க சட்டமூலத்தின்படி “அபிவிருத்தி லொத்தர் சபை”யாக மாற்றப்பட்டது.

1983 இல் அபிவிருத்தி லொத்தர் சபை, லொத்தர் சந்தையில் உடனடி டிக்கட்டுகளை அறிமுகப்படுத்தி நுழைந்தது. 1987 இல் ‘சனிக்கிழமை அதிர்ஷ்டம்’ மூலம் தொலைக்காட்சியினூடு லொத்தர் சீட்டிழுப்புகளை அறிமுகப்படுத்திய முதலாவது லொத்தர் நிறுவனமாக அபிவிருத்தி லொத்தர் சபை விளங்குகிறது. ‘சனிக்கிழமை அதிர்ஷ்டம்’ஆரம்பத்தில் சனிக்கிழமைகளில் மாத்திரமே சீட்டிழுக்கப்பட்டது எனினும் பின்னர்அது புதன்கிழமைகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக ‘வாசனா சக்ரய’ தொலைக்காட்சிச் சீட்டிழுப்பு 1998 ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தப்பட்டது. இது உடனடி சுரண்டல் சீட்டுகளில் பரிசுபெறாத சீட்டுகளுக்காகவென விசேடமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களிடையே இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘அபிவிருத்தி அதிர்ஷ்டம்’ என்ற பெயரிலான இரண்டாவது தொலைக்காட்சி அதிர்ஷ்ட சீட்டிழுப்பு 1998 ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.இச்சீட்டிழுப்பு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகிறது. இச்சீட்டின் விசேட அம்சமாக வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்பொருட்டு இலக்கங்களுடன் ‘லக்கின’ சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2004 ஜனவரி 26 அன்று, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சீட்டிழுக்கும் ‘ஜயோதா’சீட்டை எம்மால் அறிமுகப்படுத்த முடிந்தது. இச்சீட்டு சுப்பர் ஜக்பொட் பரிசையும், ஜக்பொட் பரிசையும் வழமையான ஏனைய பணப் பரிசுகளையும் வழங்குகிறது. சுப்பர் ஜக்பொட் பரிசின் ஆரம்பத் தொகை ரூபா 1 கோடியாகும். வெற்றியாளர்கள் வழமையான ஜக்பொட் பரிசாக ரூபா 10 லட்சத்தைப் பெறுவார்கள்.

2009 ஏப்ரல் 10 அன்று அபிவிருத்தி லொத்தர் சபை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீட்டிழுக்கும் ‘ஜனஜய’சீட்டை அறிமுகம் செய்தது. சுப்பர் பரிசை வெல்வதற்கு அதிர்ஷ்டசாலிகள் 64 இலக்கங்களிலிருந்து 04 இலக்கங்களையும் மற்றைய இயந்திரத்திலிருந்து  ஒரு இலக்கத்தையும் பொருத்தவேண்டும்.சுப்பர் ஜக்பொட் பரிசு 50 இலட்சம் ரூபாவில் ஆரம்பிக்கும்.

2011 நவம்பர் 8 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபைக்கு மற்றுமொரு முக்கிய மைல்கல்லான நாளாகும். அன்று ‘நியத்த ஜய’ சீட்டிழுப்பு ஆரம்ப ஜக்பொட் தொகையாக 1 கோடி ரூபாவுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சீட்டிழுப்பு  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்றது. சுப்பர் பரிசை வெல்ல வெற்றியாளர் 65 இலக்கங்களிலிருந்து 04 இலக்கங்களையும் மற்றொரு இயந்திரத்திலிருந்து 26 ஆங்கில எழுத்துகளில் ஒன்றையும் பொருத்தவேண்டும்.

அபிவிருத்தி லொத்தர் சபை ஈட்டும் வருமானம் ஜனாதிபதி நிதியத்தில் வைப்பிலிடப்படுகிறது.  இதில் 50% மஹாபொல உயர் கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கை நிதியத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மிகுதித் தொகை வறிய மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும், சுகாதார நடவடிக்கைகளுக்கும், சமய ஸ்தாபனங்களை நிர்வகிப்பதற்கும், நலன்புரி சங்கங்களுக்கும்,விளையாட்டு மற்றும் கலைத்துறை நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.